பாலின உள்வாங்குதலினூடாக விவசாய உற்பத்தித் திறனுக்கு உதவிகளை வழங்கல் எனும் மாநாட்டில் பொருளாதார அபிவிருத்திக்காக பெண்கள் வழங்கும் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு
2020 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் (TAMAP) உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) மற்றும் பெண்கள் ஆய்வு நிலையம் (CENWOR) ஆகியவற்றுடன் இணைந்து பாலின உள்ளவாங்குதலினூடாக விவசாய உற்பத்தித் திறனுக்கு உதவிகளை வழங்கல் எனும் தலைப்பில் மாநாடு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், விவசாயத்துறையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு பாலின சமத்துவத்தை எவ்வாறு உள்வாங்குவது என்பது தொடர்பான புதிய சிந்தனைகளை விவசாயத் துறையைச் சேர்ந்த அபிவிருத்தி செயற்பாட்டாளர்களிடமிருந்து வெளிக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும், கொள்கை வடிவமைப்பாளர்கள், நன்கொடை வழங்குநர்கள், செயற்திட்ட வடிவமைப்பாளர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகிய சகல தரப்பினர் மத்தியில், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான கவனத்தை ஈர்க்கும் செயற்பாடாக இந்த மாநாடு அமைந்திருந்தது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமை அதிகாரி பிராங்க் ஹெஸ் கருத்துத் தெரிவிக்கையில், ‘விவசாயத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது இலங்கையில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், குறைந்தளவில் ஈடுபடுத்தப்படுகின்றது. தீர்மானமெடுத்தலில் அதிகளவு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டால், குறித்த பெண்ணுக்கு மாத்திரம் அனுகூலமாக அமையாமல், முழுக் குடும்பத்துக்கும் அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். என்றார்.