தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் (TSIA) ஊடக அறிக்கை – TSIA இறக்குமதி தடை

0

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் மீதான தற்காலிக இறக்குமதி தடை நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானம் மீது செலுத்தும் பாரதூரமான விளைவுகள்

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் இறக்குமதியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் பிரதான அமைப்பான தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் (TSIA), தங்கள் இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் இறக்குமதி தடை குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளதுடன், அத்தகைய நகர்வானது அந்நிய செலாவணி வெளிப்பாய்ச்சலை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தியது.

TSIA இலங்கையில் 300 க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்களைக் கொண்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலோனார் நாட்டின் பொருளாதாரத்துக்கு வரி வருமானம் மூலம் பங்களிப்பு செய்யும் 30 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். வருடாந்தம் மொத்தமாக ரூபா 12 பில்லியனை இவ்வாறு வரியாக செலுத்துவதுடன்,  ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மாற்று தயாரிப்புகள் மற்றும் மேலும் பல நன்மைகளையும் வழங்கி வருகின்றனர். தற்போது, இந்த தொழிற்துறையானது நாடு முழுவதும் சுமார் 50,000 தனிநபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த 300 வரையான உறுப்பினர்களும், நாடு முழுவதும் 2,000 க்கும் மேற்பட்ட  விற்பனையாளர்களை நியமித்துள்ளதுடன், அவர்கள் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும், பல்வேறு சிறு மற்றும் பெருநகரங்களில் நுண் கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்யவும் உதவியுள்ளனர்.

தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் இறக்குமதிகள் மீது தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்படுவது, களஞ்சியசாலை மற்றும் லொஜிஸ்டிக், கிளியரிங் மற்றும் போர்வடிங், வங்கி மற்றும் நிதி, கட்டுமானம் மற்றும் வணிகரீதியான ரியல் எஸ்டேட் போன்ற துணை தொழிற்துறைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று TSIA சுட்டிக்காட்டுகிறது. கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள், ஆலோசகர்கள், அளவு கணக்கெடுப்பாளர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தரைஓடு மேசன்கள் மற்றும் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் போன்ற தொழில்களை முன்னெடுப்பவர்களின் வேலைவாய்ப்பினை இது போன்ற நடவடிக்கைகள் குறைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது TSIA உறுப்பினர்கள் சராசரியாக 2 மில்லியன் சதுர அடியை களஞ்சியசாலைகளுக்காகவும், 200,000 சதுர அடியை விற்பனை காட்சியறைகளாகவும் பயன்படுத்தி வருவதன் மூலம் நாட்டின் ரியல் எஸ்ட்டேட் வருமானத்துக்கும் பங்களிப்பு செய்கின்றனர். எனவே, இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது நாடு முழுவதிலும் உள்ள களஞ்சியசாலை மற்றும் காட்சியறை உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தையும் மோசமாக பாதிக்கும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த TSIA வின் தலைவர், காமில் ஹூசைன், “சந்தை தேவையை பூர்த்தி செய்ய போதுமான உள்நாட்டு உற்பத்தி இல்லை, இது விலைகளை உயர்த்தியது மட்டுமல்லாமல், திட்டத்தினை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதில் கட்டுமானத் துறையிலும் உள்நாட்டு நுகர்வோரிடமும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதியாளர்கள் 100% வரி பங்களிப்பை வழங்கும் போது, ​​உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அரசாங்க விலை மனுக்கோரலில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், சந்தையில் 50% க்கு மட்டுமே நாங்கள் சேவை செய்கிறோம். இந்த ஒரு பக்கச்சார்பான முறையானது நியாயமற்ற விதத்தில் நன்மையடைய அவர்களுக்கு அனுமதியளிக்கின்றமை குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். அந்நிய செலாவணி வெளிப்பாச்சலைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தேவையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் எங்கள் தரவுகள் மூலம் நாம் சுட்டிக்காட்டுவது என்னவெனில், நீங்கள் பரந்தளவில் நோக்கும் போது, இறக்குமதி மீதான தற்காலிக தடையால் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை, அதே நேரத்தில் ஏற்படும் பாதிப்பை நாட்டின் அனைத்து மூலைகளிலும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களால் உணர முடியும்,”என்றார்.

தமது உறுப்பினர்கள் இலங்கையில் தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களில் முதலீடு செய்யும் பொருட்டு முக்கிய உலகளாவிய நிறுவனங்களை இங்கு கொண்டு வரும் திறன் கொண்டவர்கள் என்றும்,  உள்நாட்டில் உற்பத்திக்கான அதிக சக்திவலு செலவீனம் மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய சந்தை ஆகிய காரணிகளால் முதலீட்டின் மீதான வருமானம் குறைவென்பதால் அத்தகைய நிறுவனங்கள் இங்கு தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலீட்டுச் சூழல் உகந்ததாக இல்லை என TSIA தெரிவிக்கின்றது. எனவே, இறக்குமதி செய்வது உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விட மிகவும் மலிவானது என்றும் சிறந்த தரமான, அதிக வடிவமைப்புகளை கொண்ட உற்பத்திகளை வழங்க முடியும் என்றும் அவ் அமைப்பு குறிப்பிடுகின்றது. தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் விலையை குறைவாகப் பேணுகின்றமையானது, குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகள் இன்மையால் உள்நாட்டு தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களின் தயாரிப்பாளர்கள் விலைகளை அதிகரித்துள்ள இத்தகைய சூழலில் உள்நாட்டு கட்டுமானத் தொழிற்துறைக்கு மிகவும் அவசியமான ஊக்கமாகும்.

TSIAவின் செயலாளர் நாயகம், எர்வின் புளத்சிங்கள கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டில் தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களை தயாரிப்பதற்கு கணிசமான அளவு சக்திவலு தேவைப்படுகின்றது. இதன் பொருள் அதிக அந்நிய செலாவணி மறைமுகமாக நாட்டிலிருந்து வெளியேறுகிறது என்பதாகும். உண்மையில், இந்த சக்திவலு தேவைப்பாட்டை பொறுத்த வரையில், உள்நாட்டு தயாரிப்பிற்கான செலவானது, அதே தரத்திலான அல்லது மேம்பட்ட தரத்திலான சர்வதேச பூரணப்படுத்தப்பட்ட தயாரிப்பை விட இரு மடங்கு அதிகமாகும். பல்வேறு அளவிலான மாசுபடுத்திகள், தூசி துகள்கள், ஈயம் மற்றும் புளோரைன் ( oxides of Sulphur, Nitrogen, Carbon, Boron, Zinc, Calcium Compounds) போன்ற வாயு சார்ந்த கழிவுப்பொருட்களை சூழலுக்கு விடுவிப்பதால் இந்த தயாரிப்பு செயன்முறையும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே, இது சூழலை மிகவும் மாசுபடுத்தும் தொழிலாகும், இலங்கை போன்ற சுற்றுச்சூழல் தொடர்பில் உணர்வுள்ள நாடுகள் இதற்கு குறைந்த முன்னுரிமை வழங்க வேண்டும்,” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,” வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள் உடனான எங்கள் நீண்டகால உறவுகளை பயன்படுத்தி, நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன், வெளிநாட்டு நாணய அழுத்தத்தைக் குறைப்பதற்காக நீடிக்கப்பட்ட கடன் காலத்தின் மூலம் எங்களுக்கும் நாட்டிற்கும் ஆதரவளிக்க அவர்கள் தயாராக உள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய சூழ்நிலையில், தரைஓடுகள் மற்றும் குளியலறை உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை மீள் பரிசீலனை செய்து நீக்குமாறு நாங்கள் மிகவும் தாழ்மையுடன் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இத்தடையை நீக்குவதன் மூலம், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரங்களை அரசாங்கம் காப்பாற்ற முடியும் என்பதுடன் இந்த சிக்கலான காலங்களில் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அவர்களுக்கு வழங்கும்,” என்றார்.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *