கலா பொல இலங்கையில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் சிறந்த வாய்ப்பாகும் – ஓவியர் சீவலி இலங்கசிங்க
ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுக்கும் ‘கலா பொல’ திறந்தவெளி ஓவியக் கண்காட்சி தொடர்ச்சியாக 27 வது ஆண்டாகவும் நடைபெறவுள்ளது. இவ்வருட கண்காட்சி கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் பெப்ரவரி 23 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இடம்பெறவுள்ளது. கலா பொல, ஓவியங்கள் மற்றும் சிற்பம் போன்ற துறைகளில் திறமைவாய்ந்த உள்ளூர் கலைஞர்களுக்கு , உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தளமாகும்.
கலா பொலவுடன் தொடர்புடைய மூத்த ஓவியரான சீவலி இலங்கசிங்க பல ஆண்டுகளாக உயிர்ப்பான ஓவியங்களை இயற்றி வருகிறார். 1993 ஆம் ஆண்டு கலா பொலவின் ஆரம்பம் முதல் அவர் இந்நிகழ்வில்பங்கேற்று வருகின்றார்.
இந்நிகழ்வு தொடர்பிலும், இதில் தனது அனுபவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “சுமார் 35 கலைஞர்களின் ஒரு சிறிய விழாவாக இருந்து, இன்று பெரிய அளவிலான விழாவாக வளர்ந்துள்ளதுடன், கொழும்பில் உள்ள கிறீன் பாத் முழுவதும் நீண்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே நான் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்துகின்றேன். நான் மிகவும் விரும்பும் நிறைவான இழையமைப்பை கொண்டுள்ள இந்த எண்ணெய்கள், எனது வேலைகளுக்கு உகந்ததாக இருப்பதாக நம்புகின்றேன். இது எப்போதும் கலை ஆர்வலர்கள் மற்றும் எனது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், எனக்கு முக்கியமான இடத்தை பெற்றுத்தருகின்றது. எனவே, நான் இந்த ஊடகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன். மேலும், எனது முழுத் திறனையும் பயன்படுத்தி எண்ணெய் மூலம் எனது நுட்பங்களை மேம்படுத்துவேன்,” என்றார்.
தனது ஓவியங்கள் எப்போதும் இயற்கையுடன் தொடர்புபட்டவை எனக் கூறும் இலங்கசிங்க, அதிக அபிவிருத்தியையும், குறைந்த பாதுகாப்பையும் நாம் காணும் இந் நாளிலும், வயதிலும் தனது ஓவியங்கள் இயற்கையின் அழகு மற்றும் அதன் வலுவற்ற தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக விளக்குகின்றார்.
மேலும், தனது பின்னணி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “நான் வளர்ந்த கிராமமான இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள சீவலகுலமவில் இருந்தான எனது நினைவுகளில் இருந்து பல இயற்கை காட்சிகளை வரைகின்றேன். எனது சில ஓவியங்கள் எனது குழந்தைப் பருவத்தை அன்போடு திரும்பிப் பார்க்கின்றன. அதேபோல் இலங்கையின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் சித்தரிக்கின்றன. மிகவும் வெளிப்படையாகச் சொல்வதானால், இயற்கையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன், அதனால் சூழப்பட்டே வளர்ந்தேன். எனக்கு இந்தக் காட்சிகளை சித்திரமாக வரைய வேண்டியிருந்தது. அதேபோல், என் அழகான சிறிய கிராமம் மற்றும் கிராம வாழ்க்கையின் அனுபவங்களும் எனக்கு வரைவதற்கு பெருமளவில் ஊக்கமளித்தன,” என குறிப்பிடுகின்றார்.
கலா பொல இலங்கையில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் சிறந்த வாய்ப்பாகும். இந்த தளம் கலை ஆர்வலர்கள், கொள்வனவாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கலைஞர்களும் தொடர்புகொள்ள வாய்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் இலங்கையின் கலாசாரம் மற்றும் படைப்புகளின் பின்னணியில் உள்ள கலைஞர்களின் கதைகளைப் பற்றி மென்மேலும் அறியவும், கலைஞர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு வாய்ப்பளிக்கின்றது. கொள்வனவாளர்களையும் கலைஞர்களையும் ஒன்றாக இணைக்க, இது போன்ற பற்பல நிகழ்வுகள் அவசியமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.