மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வசதியான பிணக்கு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகிறது
இலங்கையின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது (MBC), நீதியமைச்சுடன் இணைந்து பொது மக்களுக்கான பிணக்கு பற்றிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் வசதியான முறையை, பிரதேச செயலக மட்டத்தில் மத்தியஸ்த சபை முறைப்பாடு பெட்டியை அறிமுகம் செய்வதன் மூலமாக தொடங்கிவைத்துள்ளது. இது சனசமூக மத்தியஸ்த சபைகள் (CMBs) தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தி CMB க்களுக்கு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெறுவதை எளிதாக்குகிறது.
முதல் பெட்டிகளை ஒப்படைக்கும் நிகழ்வு பல சிறப்பு அதிதிகளின் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு நீதி அமைச்சர் திரு. அலி சப்ரி, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் திரு. தோர்ஸ்டன் பார்க்ப்ரீட், இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் SEDR திட்ட குழுத் தலைவர் திரு. ஜாக் காஸ்டன்ஸ் மற்றும் ஆசியா நிலையத்தின் இலங்கை பிரதி பிரதிநிதி திரு. யொஹான் ரொபேர்ட் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பிணக்கு பற்றிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான தற்போதைய முறையின் கீழ், பிணக்குக்குரிய பகுதியில் உள்ள சனசமூக மத்தியஸ்த சபையின் (CMB) குறித்த அதிகாரியிடம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை முறையான கடிதத்திண் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும், மத்தியஸ்த சபையானது பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கும்படியாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகத் தோன்றியது. இதற்கான ஒரு தீர்வாக, வசதியான பிணக்கு ஏற்றுக்கொள்ளும் முறையை செயல்படுத்த மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு முடிவு செய்தது. பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசியா நிலையம் (TAF), 350 மத்தியஸ்த சபை முறைப்பாடு பெட்டிகளை வடிவமைத்து தயாரித்து 25 மாவட்ட செயலகங்களுக்கு விநியோகம் செய்வதை மேற்பார்வையிட ஒரு சேவை வழங்குனருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
SEDR என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட ஆசியா நிலையத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படும் நான்கு ஆண்டு நீதி அணுகல் திட்டமாகும். இந்த யூரோ 7 மில்லியன் மதிப்புள்ள திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான STRIDE (வலுவூட்டலான மாற்றம், நல்லிணக்கம் மற்றும் உள்வாங்கலான ஜனநாயக ஈடுபாடு) எனும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் திரு. தோர்ஸ்டன் பார்க்ப்ரீட், “உள்ளூர் பிணக்குககளைத் தீர்ப்பது உள்ளூராட்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். அதே போன்று பிணக்குககளைத் திறம்பட ஏற்றுக்கொள்வது தொடர்பான அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு நாங்கள் பணியாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். மத்தியஸ்த சபை முறைப்பாடு பெட்டியானது பொதுமக்கள் தங்கள் குறைகளை சமர்பிக்க எளிதான ஒரு வழியாகும், மேலும் சமூகத்தில் அதிகமான மக்கள் தங்கள் குறைகளை முன்வைக்க ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது இறுதியில் சமூக நீதியின் மீதான நம்பிக்கையை மற்றும் துணிவார்வத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. SEDR திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியானது, இலங்கையில் சமூக உரையாடலை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் அரசாங்கத்திற்கு உதவுவதற்குமான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.” என குறிப்பிட்டார்.
மாண்புமிகு நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள், “மாற்று பிணக்கு தீர்வு (Alternate Dispute Resolution – ADR) வழிமுறைகள் உலகின் பல அதிகார வரம்புகளில் பயனுள்ள, விரைவான மற்றும் செலவு குறைந்தவை என்பதை நிரூபித்துள்ளன. குறிப்பாக மத்தியஸ்தம் என்பது இலங்கையில் நீதித்துறையின் சுமையைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது, அதே சமயம் இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையும் வழங்கும். இந்த திட்டம் மத்தியஸ்தத்தை எளிதாக்கும் மற்றும் இலங்கையில் ADR பொறிமுறையாக அதன் வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இந்த திட்டத்தை ஆதரித்ததற்காகவும், இந்த முன்னேற்றகரமான நடவடிக்கையை மேற்கொள்வதில் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றியதற்காகவும் எங்கள் மேம்பாட்டு பங்காளிகளான பிரிட்டிஷ் கவுன்சில், ஆசியா நிலையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.” என கருத்து தெரிவித்தார்.
(SEDR) திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை www.SEDRSriLanka.org மற்றும் Facebook மற்றும் Twitter இல் @SEDRSriLanka இல் காணலாம்.
செய்தி ஆசிரியர் கவனத்திற்கு
SEDR என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட ஆசியா நிலையத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படும் நான்கு ஆண்டு நீதி அணுகல் திட்டமாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட அதன் இலங்கைக்கான STRIDE (வலுவூட்டலான மாற்றம், நல்லிணக்கம் மற்றும் உள்வாங்கலான ஜனநாயக ஈடுபாடு) எனும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.