இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரே தீர்வு புதுப்பிக்கத்தக்க சக்தியாகும்
இலங்கை தற்போது கடுமையான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக மின்சக்திக்கான எரிபொருளை இறக்குமதி மூலம் பெற வேண்டிய தேவையில் நாடு தங்கியிருக்கின்றது. இதற்குத் தீர்வாக, காற்று, சூரிய ஒளி, உயிர் வாயு, சேதனங்கள், நீர் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் தொடர்பில் நாடு கவனம் செலுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க சக்தியானது, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் கொள்ளளவு பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், எரிசக்தி உற்பத்தியின் பிரதான மூலமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதே இலங்கை எடுக்க வேண்டிய ஒரே தர்க்கரீதியான தீர்வாகும். இலங்கையில் காணப்படும் ஏராளமான இயற்கை வளங்களைப் பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்க முடியும். இதன் மூலம் எரிசக்திக்காக எரிபொருள் இறக்குமதியில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், இது இலங்கையின் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்புக்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கும்.
எரிபொருள், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதால், எரிபொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் தேவை காணப்படுகின்ற இலங்கை போன்ற நாடுகள், புதுப்பிக்க முடியாத சக்தி மூலங்களில் அதிகம் தங்கியிருப்பதானது, நாட்டிற்கு நிலைபேறானதாக அமையாது. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, புதுப்பிக்கத்தக்க சக்தி வடிவங்களுக்கு விரைவில் மாறுவது அவசியமாகும்.
இது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட Hydro Power Developers Association சங்கத்தின் முன்னாள் தலைவர் ரியாஸ் சங்கனி, “ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை எனும் வகையில், நாட்டின் தற்போதைய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உதவுவதே எமது இலக்காகும். அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இதில் பிரதானமானது என நாம் நம்புகிறோம். இதன் மூலமாகவே, அனைத்து தடைகளையும் வெற்றிகரமாக கடந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற முடியும்.” என்றார்.
தற்போது 294 தனியார் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டாளர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மொத்த கொள்ளளவு 718.334 மெகாவாட் (MW) ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முழுப் பலனையும் நாடு உண்மையாகப் பெறுவதற்கு, இவ்வாறான திட்டங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்படுவது அவசியமாகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக, அரசாங்க அனுமதியைப் பெறுவதற்கான செயன்முறை அமைகின்றது. இதனை நிறைவு செய்ய பல வருடங்கள் எடுக்கும் நிலை காணப்படுகின்றது. இச்செயன்முறையை நெறிப்படுத்தி முடிந்தவரை திறனான வகையில் அதனை மேற்கொள்ள வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டாளர்கள், இலங்கை மின்சார சபையிடமிருந்து பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அனுமதி வழங்குவதில் தாமதம், மின் உற்பத்தி தளத்திற்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கும் இடையிலான இணைப்பு, சில வேளைகளில் அவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான தொழில்நுட்ப ஆய்வு காரணமாகவும் இந்நிலைமை ஏற்படுகின்றது. மின்சார சபைக்கு இது தொடர்பான உரிய அறிவு மற்றும் சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளை வழங்குவதன் மூலம் இந்த சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
இத்துறையின் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வெற்றியைத் தடுக்கும் மற்றொரு பிரச்சினையாகும். இதன் காரணமாக, அவசியமான இயந்திரங்களைப் பெறுவதில் சிரமம் நிலவுகின்றது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் காரணமாக நாடு உடனடி நன்மைகளைப் பெறுவதோடு மாத்திரமன்றி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் காரணமாக, காலநிலை மற்றும் சூழலுக்கு குறைந்தளவான பாதிப்பே ஏற்படுகின்றது. இதன் மூலம் சூழலைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் சூழல் பிரச்சினைகளால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் இடையூறுகளை தவிரக்கவும் முடியும்.
இலங்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான தடைகள் குறைவு என்பதை அவர்களுக்கு காண்பிப்பதன் மூலம் இந்த முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள முதலீடு என்பதை அறியச் செய்ய முடியும். இதன் மூலமே இலங்கை தனது சமூகப் பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும்.