இலங்கையில் நீர் வளர்ப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் Purest Group
Purest Group ஆனது, புத்தளத்தை தளமாகக் கொண்ட ஒரு விவசாய ஆலோசனை நிறுவனமாகும். இது இலங்கையில் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பில் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் அதன் வளர்ச்சி உறுதி செய்வதோடு, தரம், அளவு, தரநிலை ஆகியவற்றின் அடிப்படையில் அறுவடையின் திறனை, இயற்கையான மற்றும் புத்தாக்க வழிமுறைகள் மூலம் மேம்படுத்துகிறது. உயிரியல்தொழில்நுட்பம் மற்றும் உணவு உற்பத்தி தொழில்நுட்பம் மூலமான நிலைபேறான வகையில் மக்களுக்கான உற்பத்திகளை வழங்கும் நடைமுறைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உணவு தொடர்பான நெருக்கடிகள் மற்றும் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதே அதன் இறுதி நோக்கமாகும்.
Purest Group இனது முக்கியமான முயற்சியாக AEIOU திட்டம் விளங்குகின்து. இது தற்போது நாட்டின் நண்டு வளர்ப்புத் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புரட்சிகர திட்டமானது, நண்டு அறுவடையை அதன் வழக்கமான உற்பத்தியில் நான்கு மடங்கு வரை அதிகப்படுத்துவதில் வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது. அத்துடன், முன்பு ஒரு நண்டு 250 கிராமாக கிடைக்கும் நிலையில் தற்போது அது 1 கிலோ வரை சாத்தியமாகின்றது. Purest Group ஆனது, தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள பண்ணைகளுக்கு இம்முறைமையை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது.
நமது நாட்டில் நண்டு வளர்ப்பில் ஈடுபடுவோரை பெருக்குவதற்கான நோக்கத்துடன், Purest Group ஆனது தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் HackaDev மூலம் ஆதரவளிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கையிலுள்ள இளைஞர்கள் மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்கு உதவியளிப்பதன் மூலம், இலங்கையிலுள்ள இளைஞர்களை மிகவும் புத்தாக்கமானவர்களாகவும் தொழில்முனைவோராகவும் இருக்கும் பொருட்டு, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், மிகவும் உறுதியான அபிவிருத்தி சவால்களை நிலைபேறான வகையில் தீர்ப்பதற்கு அதிகாரமளிப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதுடன், அவர்களுக்கான வாய்ப்பையும், அடுத்த தலைமுறைக்கு தேவையான திறன்களை வழங்குகின்றது.
HackaDev Enterprise Support Program (HESP) ஆனது, கொவிட்-19 தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள, HackaDev முன்னாள் மாணவர் வலையமைப்பிலுள்ள நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதையும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். 2020/21 இல் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்ட முதல் குழுவுடன் இணைந்தவாறு, இது 15 நிறுவனங்களுக்கு 06 மாத மேலதிக அபிவிருத்திக்கான உதவியை வழங்கியது. HESP தலையீட்டின் மூலமான ஆரம்ப நிதியுதவி மற்றும் நடைமுறை பாதுகாப்பு உதவி செயன்முறையை நிர்வகிப்பதற்கான நிபுணர் சேவை வழங்குநராக Curve Up திகழ்கின்றது. அது தொழில்முனைவோரின் பயணத்தில் அவர்களுக்குத் தேவையான உதவியையும் வழிகாட்டல்களையும் வழங்குவதில் வெற்றிகரமாக இருந்து வந்துள்ளதுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான பங்களிப்பையும் வழங்குகிறது.
2010 ஆம் ஆண்டிலிருந்து நண்டுகளுக்கான உலகளாவிய தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து இலங்கையில் தொழில்துறை ரீதியான நண்டு வளர்ப்பிற்கான கவனம் ஈர்க்கப்பட்டது. உணவு மற்றும் விவசாய அமைப்பின் மதிப்பீட்டுக்கு அமைய அதன் வருடாந்த வளர்ச்சி 5.05% ஆகக் காணப்படுவதன் அடிப்படையில், நண்டு வளர்ப்புத் தொழிலில் எவ்விதமான மந்தநிலையும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறிப்பாக புரதத்தின் தேவை மற்றும் நிலைபேறான விவசாயத்தின் தேவை மிக அதிகமாக காணப்படுவதன் அடிப்படையில், முன்னெப்போதையும் விட இப்போது ஒரு சிறந்த உறுதிப்பாட்டையம் வழங்குகிறது.
AEIOU திட்டம் குறித்து Purest Group இன் இணை நிறுவுனரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான முஸம்மில் முகமது முனவ்வர் கருத்து தெரிவிக்கையில், “நண்டுகளின் கேள்வி அதிகரித்து வரும் நிலையில், இக்கேள்வியை பூர்த்தி செய்வதில் நிலவும் இடைவெளியே எமது முயற்சிக்கு உத்வேகம் அளித்தது. AEIOU திட்டத்தின் கீழ் எமது நண்டு வளர்ப்பு முறைமையானது, நண்டுகளை வளர்ப்பதற்கு ஏற்ற நிலைமைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட விடாமுயற்சி மற்றும் உச்ச பராமரிப்பின் காரணமாக பல ஆண்டுகளாக மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது. நீர் மற்றும் உரிய வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்தல், உரிய போசாக்குகளை வழங்குதல், வைரஸ்கள், ஏனைய வேட்டையாடும் விலங்குககளிடமிருந்து நண்டுகளைப் பாதுகாப்பது போன்ற அனைத்து செயன்முறையிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதை நாம்; உறுதிசெய்கிறோம்.” என்றார்.
மேலும் தெரிவித்த அவர், “இது மந்திரமற்ற வகையிலான மந்திரமாகும். நீங்கள் எந்தவொரு சந்தையிலும் காணமுடியாத மிக இயற்கையானதும் ஆரோக்கியமானதுமான அறுவடையை உறுதி செய்யும் அதே வேளையில், நண்டுகளின் நிலைப்பின் பொருட்டான, கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை தொடர்பான பகுப்பாய்வுத் தரவை எந்நேரத்திலும் பெறும் வகையிலான ஒரு தொகுதியை நாம் உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
AEIOU இன் தனித்துவமான மற்றும் எதிர்காலத்தின் அடிப்படையிலான உட்கட்டமைப்பு, தரக் கட்டுப்பாட்டு தொகுதி, போசாக்கு முகாமைத்துவ தொகுதிகள், ஆலோசனை மற்றும் விளிப்பூட்டல் சேவைகள் ஆகியன, அனைத்தையும் உள்ளடக்கிய மீன்வளர்ப்பு மற்றும் விவசாய ஆலோசனை நிறுவனமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் சமூகம், தொழில்துறை, பொருளாதாரம் ஆகியவற்றில் கணிசமான தாக்கத்தை உருவாக்குவதற்கான பாதையில் நிறுவனம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
UNDP ஸ்ரீலங்காவின் கொள்கை மற்றும் ஈடுபாட்டுக் குழுவின் இளைஞர் மற்றும் புத்தாக்க உதவியாளர் திருமதி சோயோன் கிம் (Soyeon Kim) கருத்துத் தெரிவிக்கையில், “தங்களது தனித்துவமான மற்றும் நிலைபேறான செயன்முறைகள் மூலம், Purest Group ஆனது, மக்களுக்கு அவசியமான உற்பத்தித் துறையில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. UNDP எனும் வகையில் HESP மூலம் அக்குழுவிற்கு உதவியளிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. சூழலுக்கு உகந்த நண்டு வளர்ப்பு மாதிரியை வழங்கும் தொலைநோக்கானது, அவர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியன, நாடு முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாக அமையும்.” என்றார்.
Curve Up நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் திட்ட முகாமையாளர் நுஹா கலீல் தெரிவிக்கையில், “PureTech இல் உள்ள குழு நிச்சயமாக மிகவும் கடின உழைப்பாளர்களைக் கொண்ட குழுக்களில் ஒன்று எனக் கூறலாம். அவர்கள் தங்கள் பயணம் முழுவதும் காண்பித்த அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, உறுதிப்பாடு ஆகியன மிகவும் உத்வேகத்தை அளிக்கின்றது. இப்பயணத்தில் ஒரு பங்காளர் என்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஒரு யோசனை’ ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தைப் பார்க்க அழகாக இருந்தது. விடாமுயற்சியும் ஆர்வமும் இருக்கும் வரை எதுவும் சாத்தியமில்லை என்பதை இது காட்டுகிறது.” என்றார்
Purest Group ஆனது, ஆரம்பத்தில் நண்பர்கள் குழுவொன்றினால் பல்கலைக்கழக திட்டமாகத் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். அது தற்போது பல்வேறு பாராட்டுகளையும், மானிய உதவிகளையும் பெற்ற வெற்றிகரமான முயற்சியாக வளர்ந்துள்ளது. இது ஒரு புத்தாக்கமான இளம் நிறுவனம் என்பதுடன், இலங்கை விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இணையான திறனுடனான, உற்பத்தி, இலாபம், நிலைபேறானதாக மாற்றுவதற்கான நம்பிக்கையை அது கொண்டுள்ளது. விளைச்சல் அல்லது இலாப ஆகிய விடயங்களில் எவ்வித விட்டுக் கொடுப்பையம் மேற்கொள்ளாமலும் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான உணர்வுடன் கூடிய விவசாய முறைகளை உருவாக்குவதன் மூலம் Purest Group நிலைபேறான வளர்ச்சியை உறுதி செய்கிறது. தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளை பேணியவாறு, தொழில் முனைவோரின் எண்ண நிலைப்பாடுகளை ஊக்குவிக்கும் பயிற்சித் திட்டங்கள் மூலம் கிராமப்புற சமூகத்தினரிடையே, குறிப்பாக சுய தொழில் வாய்ப்புகள் குறைவாக உள்ள சமூகங்களில் தொழில்முனைவோரை வலுவூட்டுவதோடு, அவர்களை ஊக்குவிக்கிறது.
இலங்கையில் உள்ள UNDP, அதன் பங்காளிகளுடன் இணைந்து, உறுதியான மற்றும் நிலைபேறான நடவடிக்கையின் மூலம் இளம் தொழில்முனைவோரை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதுடன், இதுபோன்ற பல HackaDev மாணவ தொழில்முனைவோருக்கு, அவர்கள் கொவிட் தொற்று மற்றும் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார விளைவுகளிலிருந்து வெளிவருவதற்கும், அவர்கள் சிறப்பாக முன்னோக்கி வெற்றிநடைபோடவும், எதிர்வரும் ஆண்டுகளிலும் ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளது.
Purest Group மற்றும் அதன் நவீன சேவைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, xxx தொடர்பு கொள்ளவும்.
###