Amana Takaful Insurance இன் பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

0

இலங்கையின் முன்னோடி காப்புறுதி நிறுவனமான Amana Takaful Insurance,  அதன் பணிப்பாளர் சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட ஆற்றல் வாய்ந்த பணிப்பாளர்களின் நியமனங்கள் தொடர்பில் அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றது.

தீப்தி விக்ரமசூரிய, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி முதல் Amana Takaful General Insurance இன் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக  நியமிக்கப்பட்டதுடன்,  2021 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் Amana Takaful Life Insurance இன் சுயாதீன பணிப்பாளராக ஷர்ஹான் முஹ்ஸீன் பொறுப்பேற்றார்.

பல தொழில்துறைகள் மற்றும் ஏராளமான நாடுகளில் 35 ஆண்டுகளுக்கும் அதிகமாக கூட்டாண்மை நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட தீப்தி விக்ரமசூரிய தற்போது வணிக செயல்முறை முகாமைத்துவம்,  திறைசேரி முகாமைத்துவம் மற்றும் வணிக ஆலோசனை ஆகிய துறைகளில் ஒரு சுயாதீன ஆலோசகராக பல சபைகள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டங்களில் பணியாற்றி வருகின்றார். நிறுவன மூலோபாயம், செயல்பாடுகள், நிதி, இடர் மற்றும் ஆளுகை தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச திட்டங்களில் தலைமை வகித்தமைக்காக அவர் நன்கறியப்பட்டவர்.

கடந்த காலங்களில் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் சபைகளின் உறுப்பினராகவும் அல்லது சபைகளுக்கான ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளதுடன், தற்போது பல நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தலைமுறை இடைவெளிகளை குறைப்பதிலும் அவர் வெற்றி கண்டுள்ளார். தீப்தி இங்கிலாந்தின் Chartered Institute of Management Accountants (CIMA) இன் சக உறுப்பினராக உள்ளதுடன், இலங்கை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் MBA பட்டத்தையும் பெற்றுள்ளார்.

“Amana Takaful இன் பணிப்பாளர் சபையில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைவதுடன், இந்த அற்புதமான நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். Amana Takaful Insurance அதன் புதுமையான காப்பீட்டுத் திட்டங்களுக்கு புகழ் பெற்றது மட்டுமல்லாமல், அதன் பன்முகத்தன்மை கலாச்சாரத்திற்காக பெரிதும் போற்றப்படுகிறது. அதன் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை அதைத் தனித்துவமான நிறுவனமாக அடையாளப்படுத்தியுள்ளதுடன், இந்த புதிய பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.

ஷர்ஹான் முஹ்ஸீன் ஒரு சிரேஷ்ட முதலீட்டு வங்கியாளர் என்பதுடன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல், கூட்டாண்மை நிறுவன நிதி மற்றும் மூலதன சந்தைகள் ஆகியவற்றில் விரிவான அனுபவத்தைக் கொண்டவராவார். அவர் ஆசியா முழுவதிலும் உள்ள பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சிரேஷ்ட தலைமைக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதுடன், அவர்களின் மூலோபாய திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை வகுக்கவும் பங்களிப்புச் செய்துள்ளார். இது தொடர்பில், அவர் நிறுவன  இணைப்புகள் மற்றும் 100 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான மூலதனத்தை திரட்டும் செயற்பாடுகளில் மிக முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார்.

ஜார்டின் ஃப்ளெமிங்கில் இலங்கையின் வங்கித் துறை ஆராய்ச்சி தலைவராகவும், முன்னணி பொருளாதார நிபுணராகவும் விளங்கும் ஷர்ஹான் வங்கித் துறை செயல்திறன், நாணய மதிப்பிறக்கம் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை குறித்த முன்னணி ஆராய்ச்சி அறிக்கைகளுக்காக நன்கறியப்பட்டவர். நிதி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பொருளாதார மேம்பாட்டு சபையின் (NCED) குழுத் தலைவராகவும், 2004 சுனாமிக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான TAFREN ஜனாதிபதி பணிக்குழுவில் பணிப்பாளராகவும் பணியாற்றியதன் மூலம் கொள்கை வகுப்பாளர் அனுபவத்தையும் அவர் கொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முதுமானி பட்டத்தையும், மேற்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளமானி (Hons) பட்டத்தையும் பெற்றுள்ள அவர் நிவ்யார்க்கின் JPMorgan Chase இல் கூட்டாண்மை நிறுவன நிதிப் பயிற்சியையும் பூர்த்தி செய்துள்ளார்.

அவர் கருத்து தெரிவிக்கையில், “பணிப்பாளராக Amana Takaful Life Insurance இல் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கை காப்புறுதி சந்தையில் புத்தாக்கத்துடன் கூடிய புதிய காப்புறுதி திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் Amana Takaful Life ன் தலைமை அதிகாரிகளுடன் இணைந்து  ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதோடு பங்குதாரர் மதிப்பை நிலைநாட்ட முகாமைத்துவ அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் தயாராக இருக்கின்றேன்,”என்றார்.

Amana Takaful Insurance தொடர்பில்:

உலகத் தரம் வாய்ந்த காப்புறுதித் தீர்வுகள் மூலம் மன அமைதியை வழங்கும் முதன்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன் 22 ஆண்டுகளுக்கு முன்பு Amana Takaful Insurance ஸ்தாபிக்கப்பட்டது. மக்கள் நட்பு நெறிமுறை நடைமுறைகளை அதன் இதயத்திற்கு நெருக்கமாக வைத்துள்ளதுடன்,  இலங்கையில் உள்ள ஒரேயொரு முதற்தர முழுமையான தகாஃபுல் காப்புறுதி நிறுவனமாகும். இலங்கை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப Amana Takaful முழுமையான ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுத் தீர்வுகளையும், சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளையும் வழங்குகிறது.

‘ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்’ என்ற நோக்கு நிலையுடன்  திகழும் Amana Takaful Insurance,  வாடிக்கையாளரை பிரதானமாகக் கொண்டமை, திறந்த மனப்பான்மை, தரத்திற்கான உறுதிப்பாடு மற்றும் பன்மைத்துவம் ஆகிய பிரதான பெறுமானங்களுடன் தன்னை வலுவாக இணைத்துக் கொள்கிறது. பங்குதாரர்களை திறம்பட ஈடுபடுத்துதல், பரஸ்பரமான மற்றும் ஒற்றுமையுடன் கூடிய மனப்பான்மையுடன் தனித்துவமான காப்புறுதித் தீர்வுகளை வடிவமைப்பதன் மூலமும் தனித்துவமாக திகழும் தொலைநோக்குப் பார்வையின் உந்துசக்தியுடனும் இந்நிறுவனம் முன்னோக்கிப் பயணிக்கின்றது.

Sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *