கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது தனிநபர் பராமரிப்பு மற்றும் சவர்க்கார உற்பத்தி நிறுவனமாக சுதேசி
இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது சவர்க்காரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் எனும் பெருமையை, சுதேசி நிறுவனம் (Swadeshi Industrial Works PLC) தனதாக்கியுள்ளது.
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொவிட் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே கொவிட்-19 இன் அபாயத்தை திறம்பட நிர்வகிப்பதில் சுதேசியின் செயற்றிறன்மிக்க முயற்சிகளுக்கு ஒரு சான்றாக, கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதி சான்றிதழ் அமைந்துள்ளது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள், விநியோக செயன்முறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதில் சுதேசியின் உறுதிப்பாட்டை இச்சான்றிதழ் நிரூபித்துள்ளது.
கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழ் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுதேசியின் பிரதித் தலைவர்/ நிர்வாக பணிப்பாளர் திருமதி சுலோதரா சமரசிங்க, “எமது செயல்பாடுகளைத் தொடரும் வகையிலான, பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நாம் கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டும் வகையில் இச்சான்றிதழைப் பெறுவதில் நாம் பெருமிதமடைகிறோம். கொவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில், பாதுகாப்பு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்துவதற்கும், நாம் ஆரம்பத்தில் இருந்தே உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளோம். இதன் மூலம் எமது ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வேலையைத் தொடர முடிந்துள்ளது. இன்று, எமது ஊழியர்களைப் பாதுகாத்த வண்ணம், சவாலான காலங்களில் நாம் அடைந்த முன்னேற்றம் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உரிய கட்டுப்பாட்டு பொறிமுறைகள் மற்றும் சுகாதாரத் தரங்களுடன், சவால்களை சமாளிக்க முடியும் என்று நாம் நம்புகிறோம்.” என்றார்.
இச்சான்றிதழானது, உரிய தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதிலிருந்து, பாதுகாப்பு தரம் தொடர்பான தொடர்ச்சியான முன்னேற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் தரங்களை பேணுவதிலிருந்து, ஊழியர்கள், உற்பத்தி மற்றும் விநியோக செயன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான முழு செயன்முறைகள் குறித்து, ஆழமான கண்காணிப்பு மற்றும் முழுமையான ஆய்வு செய்யப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“சுதேசியில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல், கைகளை கழுவுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்களை தொடர்ச்சியாக பேணுவதை நாம் ஊக்குவித்து வருவதோடு, ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும் எவ்வித ஆபத்துகளுமின்றி பணியாற்றவும், தொழிற்சாலை வளாகத்தை கிருமி நீக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்களையும் நாம் மேற்கொண்டு வருகிறோம்.” என திருமதி சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
அனைத்து பொதுப்பாவனை பகுதிகளும் தடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளதோடு, ஊழியர்களுக்கான போக்குவரத்தை வழங்குதல், கை கழுவுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல், உடல் வெப்பநிலை சோதனைகள், பி.சி.ஆர் சோதனை, விருந்தினர் விபரப் பதிவுகள் போன்றவை பேணப்படுவதோடு, இது தொடர்பில் அடிக்கடி அவர்களை விழிப்பூட்டி பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட அவசியமான பல விடயங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடிக்கடி கிருமி நீக்கம் செய்வதற்கு அவசிமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அதற்கான வளங்களையும் ஒதுக்கியுள்ளோம்.
இலங்கையில் தலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் கொஹம்ப மூலிகை சவர்க்காரத்தின் மற்றொரு வடிவாக, சுதேஷி தனது சமீபத்திய கிருமிநீக்கும் தயாரிப்பை கொஹம்ப உடன் இணைந்து தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களான, வேம்பு, வேம்பு சாரம், எண்ணெய் (Kohomba, Margosa, Neem) ஆகியன, கிருமிகளுக்கு எதிரான இயற்கைப் பாதுகாப்பை வழங்குபவை என நன்கு அறியப்பட்ட பொருட்களாகும்.
இவ்வாறான தொற்று உச்சம் கண்டுள்ள காலகட்டத்தில், சுதேசி சந்தைக்கு அறிமுகப்படுத்திய, வேம்பு, இஞ்சிப்புல், கற்றாழை கொண்ட கொஹம்ப மூலிகை கை சுத்திகரிப்பான் ஆனது, தற்போது நுகர்வோர் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்த கை சுத்திகரிப்பான், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (NMRA) பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்றாகும் என்பதோடு, இது கைகளில் பயன்படுத்துவற்கு பாதுகாப்பானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமது அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, அவர்களுக்கு கொஹம்ப கை சுத்திகரிப்பான் கிடைப்பதை சுதேசி உறுதிசெய்வதுடன், சுதேசி தனது வளாகத்தை அடிக்கடி கிருமி நீக்கம் செய்ய அதன் சொந்த கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்தியும் வருகிறது. அத்துடன், குறித்த பகுதியைச் சூழவுள்ள பல பாடசாலைகளிலும் கிருமி நீக்கல் திட்டங்களையும் சுதேசி மேற்கொண்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதுமுள்ள பல பாடசாலைகளுக்கு கை கழுவும் தொகுதிகளையும் (sinks) அது வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொற்றுநோய் காலப்பகுதியில், சுதேஷி அதன் அனைத்து தயாரிப்புகளும் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்ததோடு, இது கொவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் நுகர்வோரின் சுகாதார மட்டத்தை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான அம்சமாகவும் அமைந்தது. சுதேசி போன்ற உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள், சரியான பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி, கொவிட்-19 அற்ற சூழலை உருவாக்க, SLSI தரநிர்ணயம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது
சுதேசி ஆனது, முற்றுமுழுதான இலங்கை நிறுவனம் என்பதோடு, அண்மையில் பெற்றுக் கொண்ட கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழ் உட்பட, தொழில்துறை தொடர்பான பல விடயங்களில் முதலிடத்தை பெறுவதில் திகழ்ந்து வருகின்றது. இலங்கையில் சவர்க்காரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும், சந்தையில் முன்னிலை வகிக்கும் Swadeshi Industrial Works PLC நிறுவனமானது, ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட, 1941 இல் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாகும். சுதேசி ஆனது, அதன் வர்த்தக குறியீட்டுடனான மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளுக்கு புகழ் பெற்று விளங்குகின்றது. குறிப்பாக கொஹம்ப, ராணி மற்றும் பல ஆண்டுகளாக இலங்கையர்களால் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் கொஹம்ப பேபி போன்றவற்றை குறிப்பிடலாம். இந்நிறுவனம் 80 ஆண்டுகள் எனும் மிக உயர்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், தற்போது அதன் நம்பகமான சிறப்புகளின் உதவியுடன் உலகளாவிய சந்தைகளில் தடம் பதித்துள்ளது. சருமத்திற்கு மிருதுவானதும் மென்மையானதுமான இயற்கை மூலிகை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, சிறந்த தரமான தோல் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் சுதேசி நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. சுதேசியின் பிரபலமான வர்த்தக நாமங்களில் கொஹம்ப ஹேர்பல், ராணி சந்தன சோப், கொஹம்ப பேபி, லிட்டில் பிரின்சஸ், பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், லேடி, பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும் சுதேசி பொடி வொஷ் & ஷவர் ஜெல் உள்ளிட்டவை அடங்குகின்றன. சுதேசியினால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன.
புகைப்பட விளக்கம்
ஏ.ஐ.உடவத்தை – பிரதான நிறைவேற்று அதிகாரி, சி.எஸ்.எம். சமரசிங்க- பிரதி தலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் Swadeshi Industrial Works PLC இன் சிரேஸ்ட நிர்வாகக்குழுவினருடன் சுதேசியின் கொவிட் படையணி.